திங்கள், 22 ஜூன், 2015

ஜெயலலிதா இதைச் செய்வாரா?

HeadlinesTV.in

திறப்பு விழாக்கள், அறிவிப்புகளை தவிர உருப்படியான ஆட்சி நடக்கிறதா - ஈ வீ கே எஸ் கேள்வி
தமிழக மக்களின் பல்வேறு பிரச்சனைகள் தீர்வதற்கு ஆட்சியில் அமைச்சர்களாக இருப்பவர்கள் தலைமை செயலகத்திற்கு வருகை புரிந்து எந்த நடவடிக்கையும் எடுக்க எவரும் முன் வரவில்லை. இதனால் மக்களின் பிரச்சனைகள் தீர்க்கப்படாமல் மலைபோல் குவிந்துள்ளன. தமிழ்நாடு முழுவதும் கூட்டுறவு வீட்டு வசதி கடன் பெற்ற ஏழை எளிய குடும்பத்தைச் சேர்ந்த விவசாயம், கைத்தறி, தச்சு வேலை, கொத்தனார், கூலித் தொழில் செய்து பிழைத்து வரும் அமைப்பு சாரா தொழிலாளர்கள் பல்வேறு இன்னல்களுக்கும், தொல்லைகளுக்கும் ஆளாகி வருகின்றார்கள். இவர்களது வறுமை நிலைமையின் காரணமாக வட்டி மற்றும் அபராத வட்டியை தள்ளுபடி செய்வதோடு, அசல் தொகையையும் ரத்து செய்ய வேண்டுமென்று கோரி கடந்த 10 ஆண்டுகளாக போராடி வருகிறார்கள்.

வறுமையில் உழன்று வரும் இவர்களது கோரிக்கையை செவிமடுக்க ஆட்சியாளர்கள் தயாராக இல்லை. கடந்த 24.9.2010 அன்று வெளியிட்ட அறிக்கையும், 2011 சட்டமன்ற அதிமுக தேர்தல் அறிக்கையிலும் கூட்டுறவு வீட்டு வசதி கடனுக்கான வட்டி மற்றும் அபராத வட்டி தள்ளுபடி செய்து அசல் தொகையை மட்டுமே செலுத்த வாய்ப்பளிக்க வேண்டுமென்று ஜெயலலிதாவின் கோரிக்கையை அனைத்து ஊடகங்களிலும் வெளியிடப்பட்டதை எவரும் மறந்திருக்க மாட்டார்கள்.
ஜெயலலிதாவும் மறந்திருக்க மாட்டார். ஆனால், அதே ஜெயலலிதா முதலமைச்சர் ஆட்சி பொறுப்பேற்ற பிறகு அவரது ஆணையின் அடிப்படையில் கொடுத்த வாக்குறுதிகளை அப்பட்டமாக மீறுகிற வகையில் எந்த சலுகைகளும் அளிக்காமல் முழு கடனையும் ஓரே தவணையில் கட்டவேண்டுமென்று கெடுபிடி செய்து துன்புறுத்தி வருகிறார்கள். அப்படி கட்டாவிட்டால் ஏழை எளிய மக்களின் வீட்டை ஜப்தி செய்து ஏலத்தில் விடுவோம் என்று கடுமையாக மிரட்டுவதோடு அதற்கான அறிவிப்புகளையும் நாளேடுகளில் வெளியிட்டு வருகிறார்கள்.
ஏற்கனவே மன உளைச்சல் காரணமாக, இப்பிரச்சனையில் 9 பேர் தற்கொலை செய்துள்ளார்கள். மேலும் பலர் தற்கொலை செய்வதற்கான அபாயகரமான சூழல் உருவாகி வருகிறது. எனவே, ஜெயலலிதா கொடுத்த வாக்குறுதிகளை காப்பாற்றுகிற வகையில் கூட்டுறவு வீட்டு வசதி சங்கக் கடன் பெற்ற அனைவர் மீதும் எடுக்கப்பட்டு வரும் ஜப்தி, ஏல நடவடிக்கைகளை முழுமையாக கைவிட்டு, கடன் தொகை முழுவதையும் ரத்து செய்து, அவர்களுக்கு நிவாரணம் வழங்கி ஏழை எளிய மக்களை வாழ வைக்க முயற்சி செய்ய வேண்டும். 'மக்கள் முதல்வர்' என்று கூறிக் கொள்ளும் ஜெயலலிதா இதைச் செய்வாரா?  என்று அந்த அறிக்கையில் கேள்வி எழுப்பியுள்ளார்.
  • Jun 17, 2015

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக