கடன் செலுத்தி இரண்டு ஆண்டுகள் ஆகியும் : கூட்டுறவு சங்க உறுப்பினர்களுக்கு ஆவணங்கள் கிடைக்காத மர்மம்

00:30:28
Wednesday
2015-05-20
சென்னை : கூட்டுறவுச் சங்கத்தில் கடன் வாங்கி தவணை தொகை செலுத்திய 11 ஆயிரம் பேருக்கு 2 ஆண்டுகளாக ஆவணங்கள் தரப்படாமல் உள்ளதாகவும், தங்களின் பத்திரங்களை வங்கிகளில் மறுஅடமானம் வைத்து வீட்டுவசதி இணையத்தினர் கடன் பெறுவதாகவும் கடன்தாரர்கள் நலச்சங்கத்தினர் குற்றம் சாட்டியுள்ளனர். தமிழ்நாடு கூட்டுறவு வீட்டு வசதி இணையத்தின் கீழ், நகர்ப்புறங்களில் 624 சங்கங்கள், கிராமப்புறங்களில் 197 சங்கங்கள் என மொத்தம் 821 சங்கங்கள் உள்ளன. வீட்டுவசதி இணையம், கூட்டுறவுச் சங்க உறுப்பினர்களுக்கு அவர்களின் சொத்துப்பத்திர ஆவணம் மூலம் புதிய வீடுகட்ட மற்றும் மனைகள் வாங்குவதற்காக கடன் வழங்குகிறது. இதற்காக, மாநில அரசு, தேசிய வீட்டு வசதி வங்கி, வீட்டு வசதிக்கழகம் மற்றும் வணிக வங்கிகள் ஆகியவற்றிடமிருந்து வீட்டுவசதி இணையம் நிதி திரட்டுகிறது. கூட்டுறவுச் சங்கத்தில் தற்போது 1 லட்சத்துக்கும் மேற்பட்ட உறுப்பினர்கள் உள்ளனர். இதுவரை தமிழகம் முழுவதும் இணையம் மூலம், சுமார் ரூ.600 கோடிக்கு மேல் உறுப்பினர்களுக்கு கடன் வழங்கப்பட்டுள்ளது.
பெரும்பாலானோர் வாங்கிய கடனுக்கான தவணை தொகை செலுத்ததால் வீட்டுவசதி இணையத்தின் நிதி ஆதாரம் குறையத்தொடங்கியது. இதனால் புதிதாக கடன் வழங்குவது தற்காலிகமாக நிறுத்தப்பட்டது. 75 ஆயிரம் உறுப்பினர்களிடமிருந்து அசல், வட்டி, அபராத வட்டி என மொத்தம் ரூ.2,085 கோடி வசூலாக வேண்டியுள்ளது. இதன் காரணமாக, கடும் நிதிநெருக்கடியை சந்தித்து வரும் வீட்டுவசதி இணையம், வங்கிகளுக்கு தவணை செலுத்த முடியாமல் திணறி வருகிறது. இந்நிலையில், நிதிநிலைமையை சமாளிக்கும் வகையில், உறுப்பினர்களின் சொத்துப்பத்திர ஆவணங்களை வங்கிகளில் மறுஅடமானம் வைத்து கடன் பெறப்படுவதாக வீட்டுவசதி இணையம் மீது பரபரப்பு புகரர் எழுந்துள்ளது.
இதுகுறித்து, தமிழ்நாடு கடன்தாரர்கள் நலச்சங்க தலைவர் ராமச்சந்திரன் கூறியதாவது: கூட்டுறவு சங்கத்தில் கடன் வாங்கிய உறுப்பினர்கள், தவணை முறையில் பணம் செலுத்தி கடனை அடைத்து வந்தனர். பெரும்பாலானோர் தவணை மற்றும் வட்டி தொகையை செலுத்தாமல் இழுத்தடித்து வரும் நிலையில், சுமார் 11 ஆயிரம் பேர் வாங்கிய கடனுக்கான அசல் மற்றும் வட்டி தொகை அனைத்தையும் செலுத்தி விட்டனர். ஆனால் கடனை செலுத்தி இரண்டு ஆண்டுகள் ஆகியும் அவர்களின் சொத்துப்பத்திர ஆணவங்களை தர இணையம் மறுக்கிறது. இதனால் பயனாளிகள் பெரிதும் மனஉளைச்சலுக்கு ஆளரகியுள்ளனர். இதற்கிடையில் உறுப்பினர்களிடம் பெறப்பட்ட ஆவணங்களை வீட்டுவசதி இணைய அதிகாரிகள், வங்கிகளில் மறுஅடமானம் வைத்து கடன் வாங்குவதாக தகவல் கிடைத்துள்ளது.
இணையத்துக்கு ஏற்பட்டுள்ள ரூ.5 ஆயிரம் கோடி கடனை சமாளிக்க இதுபோன்ற நடவடிக்கையில் ஈடுபடுவதாக தெரிகிறது. முறைகேட்டில் ஈடுபடும் அதிகாரிகளால்தான் இணையம் நிதிநெருக்கடியில் சிக்கியுள்ளது. 30 ஆண்டுகளாக கடன்பெற்று வந்த உறுப்பினர்களிடம் வசூலிக்கப்பட்ட அசல், வட்டி மற்றும் வட்டி அபராத வட்டி தொகையான ரூ.2 ஆயிரம் கோடியை அரசிடம் கணக்கு காட்டாமல் இணைய அதிகாரிகள் முறைகேடு செய்துள்ளனர். ஆவணங்கள் குறித்து அதிகாரிகளிடம் கேட்டால், முறையான விளக்கம் அளிக்க மறுக்கின்றனர். கடந்த சட்ட சபை கூட்டத்தொடரின் போது சம்பந்தப்பட்ட துறை அமைச்சர், கடன் ெசலுத்திய உறுப்பினர்களின் ஆவணங்களை திருப்பி கொடுப்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என தெரிவித்தார். ஆனால், இதுவரை ஆவணங்கள் கிடைக்கவில்லை. எனவே, வீட்டுவசதி இணையத்தில் நடைபெறும் முறைகேட்டை தடுத்து நிறுத்தி, கடனை முழுமையாக செலுத்திய பயனாளிகளுக்கு உடனடியாக ஆவணங்கள் திரும்ப கிடைக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக